அரசாங்க(ஊழியர்களின்)த்தின் கவனக்குறைவு...
எனக்கு 18 வயது நிரம்பியவுடன் வாக்காளர் பதிவுச்சீட்டில் எனது பெயர் மற்றும் முழுவிவரங்களை இல்லம் தேடி வந்த அரசாங்க ஊழியர்களிடம் கொடுத்தேன். பிறகு வாக்காளர் அடையாள அட்டைக்காக புகைப்படங்களையும் மற்றும் விவரங்களையும் கொடுத்தேன். சிறிது காலம் சென்ற பிறகு தேர்தல் வந்தது. அந்த தேர்தலில் வாக்குப்பதிவு செய்வதற்காக வாக்குச்சீட்டு வந்தது. ஆனால்
வாக்காளர் அடையாள அட்டை வரவில்லை. வாக்களிக்க வேண்டியது நமது கடமையல்லவா! என்னசெய்வதென்று யோசித்துப் பார்த்தேன். குடும்ப அட்டை(Ration Card), மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்வு எழுதியதற்கான அடையாள அட்டையை(Hall Ticket) எடுத்துச் சென்று வாக்குச்சாவடியில் உள்ள அரசாங்க ஊழியர்களிடம் காண்பித்து, அவர்கள் சரிபார்த்தப் பிறகு வாக்களிக்க அனுமதி அளித்தனர். மனதிற்கு சந்தோஷமாக இருந்தது வாக்களித்து விட்டேன் என்று! ஒரு சில வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் தேர்தல் வந்தது. இதற்காக அரசாங்கம் புதிதாக விண்ணப்பிப்பவர்கள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைக்கும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தது. வாக்காளர் அடையாள அட்டைக்காக புகைப்படங்களையும் மற்றும் முழுவிவரங்களையும் கொடுத்தேன். ஆனாலும் வாக்காளர் அடையாள அட்டை வரவில்லை. மறுபடியும் குடும்ப அட்டை மற்றும் தேர்வு அடையாள அட்டை எடுத்துச் சென்று வாக்குப்பதிவு செய்தேன். இதே மாதிரி அடுத்தடுத்து தேர்தல் வந்தது குடும்ப அட்டை மற்றும் வாகன ஓட்டுனர் உரிமம்(License Card) எடுத்துச் சென்று வாக்குப்பதிவு செய்தேன். கடைசியாக அக்டோபர் மாதம், 2011ம் வருடம் வாக்காளர் பதிவில் பெயர் மற்றும் விவரங்களை திருத்துவதற்கான பணிகளை அரசாங்கம் அறிவித்தது. அதில் வாக்காளர் அடையாள அட்டைக்காக புகைப்படங்களையும் மற்றும் முழுவிவரங்களையும் சமர்பித்தேன். சிறிது காலம் சென்ற பிறகு ஜனவரி மாதம், 2012ம் வருடம் வாக்காளர் அடையாள அட்டை வந்தது. மிகவும் சந்தோஷமாக இருந்தது. அதே சமயத்தில் அரசாங்க ஊழியர்கள் மீது கோபம் வந்தது. என்னவென்று பார்த்தால் நான் வசிக்கும் முகவரிக்கும், அதில் இருக்கும் முகவரிக்கும் கொஞ்சம் கூட சம்மந்தம் இல்லை. இதை வைத்து நான் என்ன செய்ய முடியும். எந்தவொரு வேலைக்கும் உபயோகமில்லாமல் இருக்கிறது. என்னுடைய குடும்பத்திலும் மற்ற அடையாள அட்டை இப்படித்தான் இருக்கின்றன. மேலும் எங்கள் தெருவில் உள்ள மற்ற அடையாள அட்டைகளைப் பார்த்தால் (10க்கு 5) இப்படித்தான் ஏதாவது ஒன்று பிழையாக உள்ளதென்றால் 6 கோடி மேல் மக்கள் இருக்கும் நம் தமிழ்நாட்டில் குறைந்த பட்சமாக இதில் ஒரு பங்காவது இந்த மாதிரி பெயர், முகவரி, புகைப்படங்கள் தவறுதலாக இருக்கும் என்று நினைக்கின்றேன். நமது ஊழியர்களோ செய்யும் பணியை சரியாகவும், கவனமுடன் செய்வதில்லை என்றுதான் தெரிகிறது. ஒவ்வொரு முறையும் கோடிக்கணக்கான ரூபாய்களை ஒதுக்கி, முகவரி மாற்றம், புதிதாக விண்ணப்பித்தல், இதர விவரங்களை திருத்துவதற்கான பணிகளை செய்யுங்கள் என்று அரசு அறிவிக்கிறது. ஆனால் எந்த மாற்றம் செய்யாத நிலையில் இருக்கும் அடையாள அட்டையை (அதாவது பெயர், முகவரி மற்றும் இதர விவரங்கள்) மறுபடியும் மறுபடியும் பிழை திருத்தங்கள் நடக்கின்றன. பிழை திருத்தங்கள் செய்வதற்கும் பெருமளவு ரூபாய்களை அரசு ஒதுக்குகிறது. யாருக்கு நட்டம் நம்முடைய அரசுக்குத் தான். இதனை (ஒவ்வொரு துறையிலும்)முதல் முறை சரியாக செய்தாலே கோடிக்கணக்கான ரூபாய்கள் மீதமாகிறது. மீதமாகும் ரூபாய்களை மற்ற பணிகளுக்கு உபயோகிக்கலாம் அல்லவா! விலைவாசி ஏற்றமும் சற்று குறைவதற்கு வாய்ப்புண்டு. அவர்களுக்குண்டான பணிகளை சரியாக செய்தாலே போதும். அரசு இதனை தன் கவனத்திற்கு கொண்டு வந்தால் இந்த மாதிரியான குறைபாடுகள் வராது. நான் யாரையும் குறை கூறவில்லை. "தன் பணிகளை சரியாக செய்தால் போதும்". நாட்டுப்பற்றுள்ள ஒரு சாதாரண இளைஞன். இதைப் படிப்பவர்கள் கண்டிப்பாக சிரிக்க வேண்டாம். சிந்தித்துப் பாருங்கள்...
'நான் மறுபடியும் முழுவிவரங்களையும் கொடுத்து பிழைகளை சரிசெய்ய வேண்டும்'.

No comments:
Post a Comment